சோகம் தரும் வெளிநாட்டு மோகம்

கவலை தரும் கடலூர்

 

கேரளாவைச் சேர்ந்த முகமது செரீப் என்பவர் கடலூரில் அலுவலகம் அமைத்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி 200 பேரிடம் தலா ரூ 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார். வெளிநாட்டில் கூடுதல் ஊதியத்துடன் வேலை தேடிய இளைஞர்கள் இப்போது கண்ணீரில். (தினத்தந்தி. தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் இன்று வெளியான செய்தி ஆதாரம்)

கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்று நடப்பது 3வது முறையாகும். கடலூரைக் குறிவைத்து இந்த வெளிநாட்டு மோசடிப்பேர்வழிகள் களம் இறங்குவது ஏன் ? அங்குள்ள காவல்துறையில் ஒருசிலர் அவர்களின் மோசடிக்கு உடந்தையாக இருப்பது தானோ? ஏனெனில் இதுபோன்று வெளிநாட்டு மோசடிகளில் ஒருமுறைக் கூட காவல்துறையினர் முறையாக விசாரித்து அவர்களைக் கைது செய்து பணத்தைப் பெற்றுத் தந்ததில்லை என்று கூறப்படுகிறது. அதுவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராம்குமார் என்பவர் செய்த வெளிநாட்டு மோசடியில் அந்த நபர் இருக்கும் இடம் பற்றி தெரிவித்த பிறகும் அப்போது மஞ்சக்குப்பத்தில் இருந்த காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு ஏற்கனவே பெற்ற லஞ்சமே காரணமாக இருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

குற்றம் நடந்த பின்னர் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையில் உள்ள விதியா என்ன?  குற்றம் நடப்பதைத் தடுப்பதும் அவர்களின் கடமை இல்லையா ? அந்த வகையில் காவல்நிலையத்திற்கு அருகிலேயே அலுவலகம் அமைத்து அவர்கள் துணையுடன் சில இடங்களில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளுக்கு முடிவு கிடைக்குமா ? அல்லது கனவுகளுடன் திரியும் இளைஞர்களின் கண்ணீர்க் கதை நீடிக்குமா ?

கடலூர் காவல்துறை அதிகாரிகளின் கையில் தான் இதற்கு பதில் இருக்கிறது. இது ஒரு சாம்பிள்தான. இதுபோன்று மாநிலம் முழுவதும் ஏமாறுவோரின் பட்டியல்கள் இன்னும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது

விடிவு கிடைக்க இளைஞர்களின் வாழ்வு மலர காவல்துறையினர் வெளிநாட்டு மோசடிகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மறுமொழி இடுக