கச்சத்தீவை மீட்க….

கச்சத்தீவை மீட்கக் கோரி இந்திய கம்யு. போராட்டம்

தா. பாணடியன் – நல்லக்கண்ணு – ராசா உள்ளிட்டோர் கைது

 

நன்றி : புதினம்

தமிழ்ஈழ விடுதலையைத் தடுப்பதா?

சின்னஞ் சிறு நாடுகள் விடுதலையை

ஏற்பவர்கள் என்னருந் தமிழ்ஈழ விடுதலையைத்

தடுப்பதா? -நந்திவர்மன் பொதுச்செயலர்

திராவிடப்பேரவை

உலக நாடுகள் மன்றம் சின்னஞ் சிறு நாடுகளின் விடுதலை வேட்கையைத் தணித்து வருகிறது. தனி நாடுகளாக பல நாடுகள் ஏற்கப்படும் காலம் கனிந்து வருகிறது.

சோவியத் ஒன்றியம் சிதறிப் போகும் முன்னர் இருந்த சியார்சியாவில் தன்னாட்சியுடன் இயங்கிய பகுதி சௌத்ஒசட்டியா ஆகும். 1506 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் 70,000 மக்கள் அங்கு வாழ்ந்தனர். விடுதலை கோரி மக்கள் இருமுறை பொது வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர். 1992 இல் ஒருமுறையும் நவம்பர்த் திங்கள் 12 ஆம் பக்கல் 2006 இல் மறுமுறையும் பொது வாக்கெடுப்பில் தனி நாடாக விழைவு தெரிவித்து அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னமும் தனிநாடாக ஆகவில்லை. உலக நாடுகள் மன்றம் அந்நாட்டை சியார்சியாவின் ஒரு பகுதியாகவே இன்னமும் கருதுகிறது. ஆயின் அந்நாடு தன்னை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. இன்று அந்நாட்டுக் குடியரசுத் தலைவராக எட்வர்டு கொக்கோடியும் தலைமை அமைச்சராக யூரி மொரோசோவும் உள்ளனர். ஒசட்டியன் மொழியும் உருசிய மொழியும் ஆட்சி மொழிகளாக உள்ளன.

சியார்சியா நாட்டின் இன்னொரு பகுதி மக்கள் 8432 சதுரக் கிலோ மீட்டரில் வாழ்கின்றனர். 1,90,000 மக்கள் வாழும் அப்காசியா சூலைத்திங்கள் 23 ஆம் பக்கல் 1992 இல் விடுதலை பெற்ற தனிநாடாக அறிவித்துக் கொண்டது. இன்று அந்நாட்டுக் குடியரசுத் தலைவராக செர்காய் பகபக்சு அவர்களும் தலைமை அமைச்சராக அலெக்சாண்டர் அன்க்வாப் அவர்களும் உள்ளனர்.

டிரான்சுநிசுடிரியா நாடு செப்டம்பர் 2-1990 இல் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. 1607 சதுரக்கிலோ மீட்டர் பரப்பளவுடன் 5,37,000 மக்கள் வாழும் டிரான்சு நிசுடிரியா நாட்டின் குடியரசுத் தலைவராக இக்னோர் இசுமிநோவ் உள்ளார். மோலடோவில் இருந்து பிரிந்துள்ளது இந்த நாடு!

இந்த மூன்று நாடுகளும் தனி நாடுகள். தனி அரசுகள் நடந்து வருகின்றன. பாராளுமன்றமும் உள்ளது. குடியரசுத் தலைவர்களும் தலைமை அமைச்சர்களும் உள்ளனர். இந்த மூன்று நாடுகளுக்கும் விடுதலையை யாரும் வெற்றிலைப் பாக்கு வைத்து வழங்கவில்லை. அவை தாமாகவே தத்தமது நாட்டு விடுதலையை உலகுக்கு அறிவித்துக் கொண்டன. தனி நாடுகளாக இயங்கி வருகின்றன.

இந்த மூன்று நாடுகளும் உலக நாடுகள் மன்றம் தங்கள் நாடுகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வாதாடி வருகின்றன. அவர்களின் நம்பிக்கை வீண் போகாது. நெடிய நாட்கனவு நனவாகும் அறிகுறிகள் உலக அரங்கில் ஒளி விடுகின்றன.

யூகோசுலாவிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்த மொண்ட்நீக்ரோ நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் மேத்திங்கள் 21 ஆம் பக்கல் 2006 இல் விடுதலை வேண்டும் என்றனர். 3 சூன் 2006 இல் தனி நாடாகவே அறிவித்துக் கொண்டனர். சூன் 28-2006 இல் அந்நாட்டை உலக நாடுகள் மன்றம் 192 ஆவது உறுப்பு நாடாக ஏற்றுக் கொண்டுள்ளது. மே 11-2007 இல் ஐரோப்பிய ஒன்றியம் 47 ஆவது உறுப்பு நாடாக மொண்ட்நீக்ரோ நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கொசவோ நாடு பெற்ற உரிமையும் நமக்குப் பாடமாகும். 1999 இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் மன்றத்தின் இடைக்கால ஆளுமையில் கீழ்வந்த கொசவோ நாடு பிப்ரவரி 2008 இல் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. உலக நாடுகள் மன்றம் கொசவோ நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுள்ளது. அந்நாட்டுக்குப் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொசவோ குடியரசுத் தலைவர் ஃபாட்மிர் செசுடியூ, தலைமை அமைச்சர் ஆசிம் தாசி இருவரும் புதிய அரசமைப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டு ஏற்றுள்ளனர். ஏப்ரல் 8-2008 இல் நடந்த இந்த நிகழ்வால் சூன் 15-2008 முதல் அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வரும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் இவ்வரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நடுவராக இருந்து உதவியது.

மொண்ட்நீக்ரோ நாடும் கொசவோ நாடும் உலக நாடுகள் ஒன்றியத்தில் இன்று ஏற்கப்பட்டுவிட்ட தனி நாடுகள். தனி அரசுடன் அவை இயங்க உலகமே உதவிக்கரம் நீட்டியது. இதைப் பார்த்துவிட்டு சௌத்ஒசட்டியா, அப்காசியா, டிரான்நிசுடிரியா நாடுகளும் தங்கள் நாடுகளின் விடுதலையை உலகநாடுகள் மன்றம் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

உலக நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்காத தமிழ் நாட்டின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்ஈழத்துக்கு ஆதரவுக் குரல் எழுப்பாமல் பாராமன்றத்தில் ஊமைகளாய் ஆமைகளாய் உட்கார்ந்துள்ளனர். கொசவோவில் உள்நாட்டுக்குழப்பம் என்றதும் உலக நாடுகள் மன்றம் அமைதிப்படை நிறுத்தி இடைக்கால ஆட்சியை ஏற்று இன்று அந்நாட்டு விடுதலைக்கு வழி கோலியது.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்று இடைக்கால ஆட்சி ஏற்படுத்திய போது, கொசவோவில் நடந்து கொண்ட உலக நாடுகள் மன்றம் போல நடுநிலைமையுடன் இந்தியா செயல் பட்டிருந்தால் தமிழ்ஈழம் விடுதலை பெற்று பல்லாண்டுகள் ஆகி இருக்குமே?

தனி நாடுகளாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட மொண்ட்நீக்ரோ நாட்டையும் கொசவோ நாட்டையும் ஏற்றுக் கொண்டுள்ள உலக நாடுகள் மன்றம் சௌத்ஒசட்டியா, டிரான்சுநிசுடிரியா, அப்காசியா நாடுகளின் தனி நாட்டு அறிவிப்பை ஏற்க வேண்டும் என வாதாடக் கூட இந்திய நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது ஏன்?                                    

சின்னஞ்சிறு நாடுகளின் விடுதலைக்கு வரவேற்புப் பண்ணிசைக்கும் உலக நாடுகள் மன்றம் தமிழ் ஈழம் மலரத் துணை புரியாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதை உலகின் பன்னாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் குமுறும் நெஞ்சுமுடன் கூர்ந்து நோக்கி வருகின்றனர்கள். உலகமே விடுதலை நோக்கிச் செல்கையில் தமிழ் ஈழத் தமிழன் மட்டுமே அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு இருக்க வேண்டுமா? விடுதலை பிறர் தருவதன்று என்பதற்கு மேற்சொன்ன நாடுகளே சான்று. தமிழ் ஈழ விடுதலையை தமிழ் ஈழ மக்களே அறிவிக்கட்டும்! உலகம் பணிந்தே தீரும்!!

நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

இயற்கைக்கு விரோதமான போக்கு

மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு

 விரோதமான போக்கு - ஐகோர்ட்டு

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவே மருந்து

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர், உணவு கொடுக்கும்போது அவரது குணம் சாப்பிடுபவருக்கும் வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் உணவுக்கும், மனித உறவுகளுக்கும் அப்படியொரு முக்கியத்துவம் இருந்தது.

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்-ஊறுபாடு இல்லை உயிர்க்கு” என்ற திருக்குறளில், உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறளும் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல இந்த திருக்குறள் அமைந்துள்ளது.
.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல
.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே எல்லா விஞ்ஞானமும் உள்ளது. மனித உடலில் இந்த ஐம்பூதங்களும் உள்ளன. தசை, நரம்பு நிலமாகவும், பசி நெருப்பாகவும் இருக்கிறது. உடலில் நீர் ஓடுகிறது. மனிதன் இறக்கும்போது நிலத்தில் புதைக்கின்றனர். எரித்து சாம்பலை கரைக்க வேண்டுமானால் அதற்கு நெருப்பும், நீரும் தேவைப்படுகிறது. எல்லாமே மறுசுழற்சி முறையில்தான் அமைந்துள்ளன. எனவே, மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.

மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகம் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:-

உணவுத் தட்டுப்பாடு

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக் குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030-ம் ஆண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

நம் நாட்டில், 1980-ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 டன் (5 ஆயிரம் கிலோ) நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களும் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளும் வருவதில்லை.

சமுதாய விவாதம்

எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.
இந்த கருத்தரங்கில் பூவலகின் நண்பர்கம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கு.சிவராமன், டெக்கான் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் பி.வி.சதீஷ், கிரேன் அமைப்பின் மண்டல திட்ட அதிகாரி ஷாலினி புட்டானி, வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்றார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையத்தின் பிரதிநிதி வக்கீல் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
நன்றி: தினத்தந்தி


நன்றி: தினகரன்

நன்றி: தினமணி

மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடந்தது. அதி்ல் பேசுகிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அதை வீடியோவில் பதிவு செய்கிறார் ஒரு பெண்”
நன்றி: தமிழ்முரசு