சோதனையை வெல்ல

வேலையில் உங்களுக்கு சிரமமா. அல்லது உங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமா.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 கட்டளைகளை செய்தால் நல்லதே நடக்கும். நலம் பல விளையும்.

1) உங்கள் திறன், கல்வித் தகுதி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்

2) உங்கள் திறனை உயர்த்திக் கொள்க

3) உங்கள் தொழில் எப்படி இருக்கிறது ? 

4) உங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

5) தொடர்பை வளர்த்துக் கொள்க

6) உங்கள் சுய விபரத்தை அவ்வப்போது புதுப்பிக்க

7) உங்கள் உடம்பையும் பார்த்துக்குங்க. அது ரொம்ப முக்கியம்

நன்றாக உடை அணிக

9) அடிப்படையை அறிந்து கொள்க

10) உங்கள் வெற்றிக்காக எப்போதும் முனைப்பாக இருங்கள்

Advertisements

“உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்”: அண்ணா

“உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்”: அண்ணா
நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க உள்ளிருந்து நல்லறிவு புகட்டிய ஆசான்! எவரும் எப்போதும் அவரிடம இரவல் கேட்காமலே எல்லார்க்கும் எல்லாமும் அளித்த அறிவுப் புதையல் அண்ணா!

சிலையாக வழிபட அல்ல அவர் நம்மை சிந்திக்க வைத்தது! அம்பேத்கர் பிறந்த மண் அவரின் நூல்களை மலிவுப் பதிப்பாக்கி பன் மொழிகளில் பெயர்த்து கருத்துப் பரப்புதலே கடமையெனச் செயல்படுகிறது. இங்கோ அண்ணா நினைவிடத்தில் எரிவாயுவை வீணாக்கி ஒளிவிளக்கு ஏற்றி கோயிலாக்கிக் குதுகலிக்கிறார்கள். சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் சடங்குகள் நடக்கின்றன. அவரின் படைப்புகள் அரசு முயற்சியாக அகில உலகமும் சென்றடைய திட்டமில்லை. மூலக்கதையை மறைத்து தழுவல் இலக்கியங்களை மக்கள் உள்ளங்களில் தவழ விடும் முயற்சி வெற்றி பெறாது, இயல்பான ஆற்றல் இருந்தும் முன்னோடிகள் முகவரிகளை மறைக்கும் மனப்பாங்கு வேதனையளிக்கிறது. தொல்காப்பியத்தை தொலைத்து விட்டு பூங்காவில் நறுமணம் நாடுக என்றால் மனம்ஒப்புமா? வள்ளுவத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு ஓவியம் கண்டு உவந்திடுக என்றால் உள்ளம் ஏற்குமா? இளங்கோவடிகளை மறந்து விட்டு அடியார்க்கு நல்லாரை மட்டுமே அகிலம் போற்றுமா? தன் நூல்கள் தரணியில் பரவ எவருக்கும் ஆசை எழுவது இயல்பு! அதற்காக முன்னூல்கள் மறக்கப்பட வேண்டுமா? வேரின்றி செடி ஏது?விதையின்றி மரமேது? அண்ணாவின்றி நாமேது? தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டிய அண்ணாவுக்கு தமிழ்நாட்டரசு காட்டப் போகும் நன்றிக்கடன் அவரின் எழுத்தையும் பேச்சையும் கருத்தையும் எங்கும் பரப்புதலே ஆகும்!

நூற்றாண்டிலாவது ஆடம்பரங்களால் அண்ணாவுக்கு சிறுமை சேர்ப்பதைக் காட்டிலும் அவர் நூல்கள் படித்து தம்பிக்கு மடல்கள் படித்து விழிப்புற்றெழுந்த நாம், நம் பின்னவர்க்கும் அறிவியக்க வாயிலை திறந்து வைப்போமாக! அறிவு கொளுத்துவோமாக! மாநிலங்களவையில் அண்ணா முன்மொழிந்த புத்தாக்கச் சிந்தனைகளை நினைவு கூறுவோமாக!

தேசிய இனங்கள் விடுதலையை மையக் கருத்தாக்கமாக வைத்தே மாநிலங்களவையில் 1962 ஏப்ரல் திங்களில் அண்ணா தன் கன்னிப்பேச்சை நிகழ்த்தினார். இந்திய விடுதலைக்கு முன் கபூர்தலா காங்கிரஸ் மாநாட்டில் நேரு நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்து இந்திய ஒன்றியத்துக்குள் எல்லா மாநிலங்களையும் இணைத்து ஒன்றாக வைத்திருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் எந்தப் பகுதியாவது பிரிந்து செல்ல விரும்பினால் காங்கிரஸ் இசைவளிக்கும் என நேரு பேசி இருந்தார். அதை நினைவு கூர்ந்து அந்த பழைய நெருப்பு இன்னும் நேரு பெருமகனாரிடம் கனன்று கொண்டிருக்கும் என தான் நம்புவதாகச் சொன்ன அறிஞர் அண்ணா ஏன் தென்னகத்துக்குச் சுயநிர்ணய உரிமையை தரக்கூடாது? எனத் வினா எழுப்பினார். இன்றளவும் காசுமீரச் சிக்கல் போர்களுக்கும் பல்லாயிரம் உயிரிழப்புக்கும் காரணமாக விளங்குகிறது. சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டதால் தான் தமிழ் ஈழமும் துன்பக் கடலில் தத்தளித்து நிற்கிறது.

நாடுகள் பலவற்றுடன் நட்புறவு என்பது நடைமுறையில் அந்த நாடுகளில் நம்மவர் படும் அவதிகள் தீர வழிகாண்பதில்லை என்பது அறிஞர் அண்ணாவின் வருத்தமாகும். 1966 ல் அண்ணா மாநிலங்களவையில் பேசிய சமயத்தில் அங்கேரி நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். தெருவில் இரு இளைஞர்கள் கிணடவாகப் பேசுவதாக அண்ணா சொன்னார். பசி (Hungry)நாட்டுப் பிரதமரை பார்க்க அங்கேரி (hungary) நாட்டுப் பிரதமர் வந்துள்ளதாக கிண்டல் செய்தாராம். இதைச் சொன்ன அண்ணா நட்புறவுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார். பயன் ஏதேனும் இருந்திருப்பின் தென்னகத் திலிருந்து பர்மா சென்றவர்கள் ஏதிலிகளாய் எல்லாவற்றையும் இழந்து இந்தியா திரும்பிய சிக்கலுக்கு விடிவு காணப்பட்டிருக்கும். ஆனால் பலமுறை பர்மா போகிறார்கள்- வருகிறார்கள்- சுமுகத்தீர்வு ஏற்படும் என்று சொல்லி வருகிறார்கள். பயனில்லை. நட்புறவு என்பது இருநாட்டுத் தலைவர்களும் ஒருவர் நாட்டுக்கு அடுத்தவர் விருந்தினராகப் போய் திரும்புவதன்று. இரு நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத நட்புறவால் எள்ளளவும் பயனில்லை என்றார் அண்ணா. அடுத்து அண்ணா 1966 லேயே நாடாளுமன்றத்திலேயே கூறிய அறிவுரைகள் அவரின் தொலை நோக்குப் பார்வைக்குச் சான்றாகத் திகழ்கின்றது. பணக்கார நாடுகளுடன் பந்தபாசம் காட்ட போட்டா போட்டி போடும் தலைவர்களுக்கு மத்தியில் ஆப்ரிக்க நாடுகளுடன் இந்தியா தோழமை பூண்டிட வேண்டும் என்ற அண்ணா மாறுபட்டவர். ஏழைகளையே எண்ணி அரசியல் வியூகம் வகுப்பவர் என்பது வெள்ளிடை மலையென விளங்குகிறது.

இன்று 12.4% இந்தியாவின் பணவீக்கம் எனில் ஆப்ரிக்க நாடான ஜிம்பாபாவேயின் பணவீக்கம் 1,500,000% விழுக்காடாகும். ஒரு தேநீர் பருக பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை! ஏழை நாடுகளை உயர்த்திட இந்தியா தன் பங்களிப்பை ஆற்ற அறிஞர் அண்ணா அன்றே அறிவுரை சொன்னார். அமெரிக்காவுக்கு வெண்சாமரம் வீச அல்ல அண்ணா சொன்ன அறிவுரை!


பிரிட்டன் தன் காலனி நாடுகளை ஒரு அமைப்புக்குள் அடக்கி வைத்திருக்க உருவாக்கியது காமன் வெல்த் அமைப்பு! தென் கிழக்காசிய நாடுகள் காமன் வெல்த் உருவாக்க இந்தியா முனைப்பு காட்ட வேண்டுமென அண்ணா பேசினார். ஐரோப்பிய யூனியன் உருவாகும் முன்பே தென் கிழக்காசிய நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டுக்காக ஓரமைப்பிற்குள் திரள வேண்டும் என்றார் அண்ணா. சப்பானிய கூட்டையும் சப்பானிய தொழில் முனைவோர் பங்களிப்பையும் பெற்று இந்தியா ஏற்றமுற வேண்டுமென அறிஞர் அண்ணா எடுத்தியம்பினார்.

அண்ணாவின் பார்வை உலகநோக்குடையது, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேருரையில் அண்ணா தன் உலக நோக்கை அழகுறப் படம் பிறப்பார்.

“கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத – கஞ்சநெஞ்சனின்இதயமில்லாக் கடும்பார்வை விழாத – தேவைகள், குற்றங்கள், பொய்மையே இல்லாத – பழிப்புரையே கேளாத உலகம் – உடலாலும் உள்ளத்தாலும் பிணிவயப்படாத மனித இனம் – எங்கே வாழ்நாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ -எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ – அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கி குடிசையில் – வாழும் மனிதனை இட்டுச் செல்லும் இலட்சியமே அண்ணாயிசம்”
அண்ணாவின் கொள்கைளை மறந்துவிட்டு ஆளுயர வெட்டுருக்களில் அஞ்சல் தலை அளவு அண்ணா படம் போட்டு நூற்றாண்டு எடுக்கிறார்கள். இருளைக் கிழித்து எழுஞாயிறாக கூழைகளுக்காக எளிமையான அரசியல் நடத்திய அண்ணாவின் புகழ் உலகில் ஓங்கும்! உண்மைக்கு அழிவில்லை!

நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

கண்ணீர் காட்சிகள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் வன் கொடூரங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இழந்து அவலத்துக்குள்ளாகியிருக்கும் காட்சிப் படங்கள்.

வானமே கூரையாக ….

 

 

 

காணும் போதே கண்ணீரை வரவழைக்கக் கூடிய இந்த கொடுமைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே உலக தமிழர்களின் ஏக்கம்.

தங்க மகன் அபினவ் பிந்த்ரா

செய்தி :

பீசிங் ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்து பொன் எழுத்துக்களால் வரலாறு படைத்தார் அபினவ்.

இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க இது ஊக்க சக்தியாக இருக்கும் என்பது திண்ணம் .

கச்சத்தீவை மீட்க….

கச்சத்தீவை மீட்கக் கோரி இந்திய கம்யு. போராட்டம்

தா. பாணடியன் – நல்லக்கண்ணு – ராசா உள்ளிட்டோர் கைது

 

நன்றி : புதினம்

தமிழ்ஈழ விடுதலையைத் தடுப்பதா?

சின்னஞ் சிறு நாடுகள் விடுதலையை

ஏற்பவர்கள் என்னருந் தமிழ்ஈழ விடுதலையைத்

தடுப்பதா? -நந்திவர்மன் பொதுச்செயலர்

திராவிடப்பேரவை

உலக நாடுகள் மன்றம் சின்னஞ் சிறு நாடுகளின் விடுதலை வேட்கையைத் தணித்து வருகிறது. தனி நாடுகளாக பல நாடுகள் ஏற்கப்படும் காலம் கனிந்து வருகிறது.

சோவியத் ஒன்றியம் சிதறிப் போகும் முன்னர் இருந்த சியார்சியாவில் தன்னாட்சியுடன் இயங்கிய பகுதி சௌத்ஒசட்டியா ஆகும். 1506 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் 70,000 மக்கள் அங்கு வாழ்ந்தனர். விடுதலை கோரி மக்கள் இருமுறை பொது வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர். 1992 இல் ஒருமுறையும் நவம்பர்த் திங்கள் 12 ஆம் பக்கல் 2006 இல் மறுமுறையும் பொது வாக்கெடுப்பில் தனி நாடாக விழைவு தெரிவித்து அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னமும் தனிநாடாக ஆகவில்லை. உலக நாடுகள் மன்றம் அந்நாட்டை சியார்சியாவின் ஒரு பகுதியாகவே இன்னமும் கருதுகிறது. ஆயின் அந்நாடு தன்னை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. இன்று அந்நாட்டுக் குடியரசுத் தலைவராக எட்வர்டு கொக்கோடியும் தலைமை அமைச்சராக யூரி மொரோசோவும் உள்ளனர். ஒசட்டியன் மொழியும் உருசிய மொழியும் ஆட்சி மொழிகளாக உள்ளன.

சியார்சியா நாட்டின் இன்னொரு பகுதி மக்கள் 8432 சதுரக் கிலோ மீட்டரில் வாழ்கின்றனர். 1,90,000 மக்கள் வாழும் அப்காசியா சூலைத்திங்கள் 23 ஆம் பக்கல் 1992 இல் விடுதலை பெற்ற தனிநாடாக அறிவித்துக் கொண்டது. இன்று அந்நாட்டுக் குடியரசுத் தலைவராக செர்காய் பகபக்சு அவர்களும் தலைமை அமைச்சராக அலெக்சாண்டர் அன்க்வாப் அவர்களும் உள்ளனர்.

டிரான்சுநிசுடிரியா நாடு செப்டம்பர் 2-1990 இல் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. 1607 சதுரக்கிலோ மீட்டர் பரப்பளவுடன் 5,37,000 மக்கள் வாழும் டிரான்சு நிசுடிரியா நாட்டின் குடியரசுத் தலைவராக இக்னோர் இசுமிநோவ் உள்ளார். மோலடோவில் இருந்து பிரிந்துள்ளது இந்த நாடு!

இந்த மூன்று நாடுகளும் தனி நாடுகள். தனி அரசுகள் நடந்து வருகின்றன. பாராளுமன்றமும் உள்ளது. குடியரசுத் தலைவர்களும் தலைமை அமைச்சர்களும் உள்ளனர். இந்த மூன்று நாடுகளுக்கும் விடுதலையை யாரும் வெற்றிலைப் பாக்கு வைத்து வழங்கவில்லை. அவை தாமாகவே தத்தமது நாட்டு விடுதலையை உலகுக்கு அறிவித்துக் கொண்டன. தனி நாடுகளாக இயங்கி வருகின்றன.

இந்த மூன்று நாடுகளும் உலக நாடுகள் மன்றம் தங்கள் நாடுகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வாதாடி வருகின்றன. அவர்களின் நம்பிக்கை வீண் போகாது. நெடிய நாட்கனவு நனவாகும் அறிகுறிகள் உலக அரங்கில் ஒளி விடுகின்றன.

யூகோசுலாவிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்த மொண்ட்நீக்ரோ நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் மேத்திங்கள் 21 ஆம் பக்கல் 2006 இல் விடுதலை வேண்டும் என்றனர். 3 சூன் 2006 இல் தனி நாடாகவே அறிவித்துக் கொண்டனர். சூன் 28-2006 இல் அந்நாட்டை உலக நாடுகள் மன்றம் 192 ஆவது உறுப்பு நாடாக ஏற்றுக் கொண்டுள்ளது. மே 11-2007 இல் ஐரோப்பிய ஒன்றியம் 47 ஆவது உறுப்பு நாடாக மொண்ட்நீக்ரோ நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கொசவோ நாடு பெற்ற உரிமையும் நமக்குப் பாடமாகும். 1999 இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் மன்றத்தின் இடைக்கால ஆளுமையில் கீழ்வந்த கொசவோ நாடு பிப்ரவரி 2008 இல் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. உலக நாடுகள் மன்றம் கொசவோ நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுள்ளது. அந்நாட்டுக்குப் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொசவோ குடியரசுத் தலைவர் ஃபாட்மிர் செசுடியூ, தலைமை அமைச்சர் ஆசிம் தாசி இருவரும் புதிய அரசமைப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டு ஏற்றுள்ளனர். ஏப்ரல் 8-2008 இல் நடந்த இந்த நிகழ்வால் சூன் 15-2008 முதல் அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வரும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் இவ்வரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நடுவராக இருந்து உதவியது.

மொண்ட்நீக்ரோ நாடும் கொசவோ நாடும் உலக நாடுகள் ஒன்றியத்தில் இன்று ஏற்கப்பட்டுவிட்ட தனி நாடுகள். தனி அரசுடன் அவை இயங்க உலகமே உதவிக்கரம் நீட்டியது. இதைப் பார்த்துவிட்டு சௌத்ஒசட்டியா, அப்காசியா, டிரான்நிசுடிரியா நாடுகளும் தங்கள் நாடுகளின் விடுதலையை உலகநாடுகள் மன்றம் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

உலக நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்காத தமிழ் நாட்டின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்ஈழத்துக்கு ஆதரவுக் குரல் எழுப்பாமல் பாராமன்றத்தில் ஊமைகளாய் ஆமைகளாய் உட்கார்ந்துள்ளனர். கொசவோவில் உள்நாட்டுக்குழப்பம் என்றதும் உலக நாடுகள் மன்றம் அமைதிப்படை நிறுத்தி இடைக்கால ஆட்சியை ஏற்று இன்று அந்நாட்டு விடுதலைக்கு வழி கோலியது.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்று இடைக்கால ஆட்சி ஏற்படுத்திய போது, கொசவோவில் நடந்து கொண்ட உலக நாடுகள் மன்றம் போல நடுநிலைமையுடன் இந்தியா செயல் பட்டிருந்தால் தமிழ்ஈழம் விடுதலை பெற்று பல்லாண்டுகள் ஆகி இருக்குமே?

தனி நாடுகளாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட மொண்ட்நீக்ரோ நாட்டையும் கொசவோ நாட்டையும் ஏற்றுக் கொண்டுள்ள உலக நாடுகள் மன்றம் சௌத்ஒசட்டியா, டிரான்சுநிசுடிரியா, அப்காசியா நாடுகளின் தனி நாட்டு அறிவிப்பை ஏற்க வேண்டும் என வாதாடக் கூட இந்திய நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது ஏன்?                                    

சின்னஞ்சிறு நாடுகளின் விடுதலைக்கு வரவேற்புப் பண்ணிசைக்கும் உலக நாடுகள் மன்றம் தமிழ் ஈழம் மலரத் துணை புரியாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதை உலகின் பன்னாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் குமுறும் நெஞ்சுமுடன் கூர்ந்து நோக்கி வருகின்றனர்கள். உலகமே விடுதலை நோக்கிச் செல்கையில் தமிழ் ஈழத் தமிழன் மட்டுமே அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு இருக்க வேண்டுமா? விடுதலை பிறர் தருவதன்று என்பதற்கு மேற்சொன்ன நாடுகளே சான்று. தமிழ் ஈழ விடுதலையை தமிழ் ஈழ மக்களே அறிவிக்கட்டும்! உலகம் பணிந்தே தீரும்!!

நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

இயற்கைக்கு விரோதமான போக்கு

மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு

 விரோதமான போக்கு – ஐகோர்ட்டு

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவே மருந்து

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர், உணவு கொடுக்கும்போது அவரது குணம் சாப்பிடுபவருக்கும் வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் உணவுக்கும், மனித உறவுகளுக்கும் அப்படியொரு முக்கியத்துவம் இருந்தது.

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்-ஊறுபாடு இல்லை உயிர்க்கு” என்ற திருக்குறளில், உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறளும் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல இந்த திருக்குறள் அமைந்துள்ளது.
.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல
.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே எல்லா விஞ்ஞானமும் உள்ளது. மனித உடலில் இந்த ஐம்பூதங்களும் உள்ளன. தசை, நரம்பு நிலமாகவும், பசி நெருப்பாகவும் இருக்கிறது. உடலில் நீர் ஓடுகிறது. மனிதன் இறக்கும்போது நிலத்தில் புதைக்கின்றனர். எரித்து சாம்பலை கரைக்க வேண்டுமானால் அதற்கு நெருப்பும், நீரும் தேவைப்படுகிறது. எல்லாமே மறுசுழற்சி முறையில்தான் அமைந்துள்ளன. எனவே, மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.

மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகம் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:-

உணவுத் தட்டுப்பாடு

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக் குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030-ம் ஆண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

நம் நாட்டில், 1980-ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 டன் (5 ஆயிரம் கிலோ) நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களும் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளும் வருவதில்லை.

சமுதாய விவாதம்

எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.
இந்த கருத்தரங்கில் பூவலகின் நண்பர்கம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கு.சிவராமன், டெக்கான் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் பி.வி.சதீஷ், கிரேன் அமைப்பின் மண்டல திட்ட அதிகாரி ஷாலினி புட்டானி, வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்றார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையத்தின் பிரதிநிதி வக்கீல் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
நன்றி: தினத்தந்தி


நன்றி: தினகரன்

நன்றி: தினமணி

மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடந்தது. அதி்ல் பேசுகிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அதை வீடியோவில் பதிவு செய்கிறார் ஒரு பெண்”
நன்றி: தமிழ்முரசு